திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று வேணுவனநாதர் மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருநெல்வேலி தலபுராணத்தின்படி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடத்திய நெல்லையப்பர் தன் ஐந்தொழில் களில் ஒன்றான மறைத்தலை (திரோபவம்) மேற்கொண்டபின், மூங்கில் காட்டில் முளைத்து தன்னை வேணுவனநாதராக சுயம்பு ரூபத்தில் வெளிப்படுத்தி அருளினார். நெல்லையப்பரின் இணை காந்திமதி அம்மன் என்றால், வேணுவனநாதர் தன் இணையான மனோன்மணியை தன்னுடைய சுயம்பு ரூபத்திலேயே அடக்கிக் கொண்டார் என புராண வரலாறு கூறுகிறது.
வேணுவனநாதரின் மூலவர் திருமேனிக்கு பாலாபிஷேகம் தற்போதுவரை நடைபெறுகிறது. நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் ஐப்பசி மாதம் நடைபெறுகிறது. அதேநேரத்தில் வேணுவனநாதரின் திருமணம் திருவாதிரை திருவிழாவின் 6-ம் நாளன்று நடைபெறுகிறது. வேணுவனநாதரின் கருவறைக்குள் இருக்கும் அன்னை மனோன்மணியின் உற்சவ திருமேனி கருவறையை விட்டு வெளியே வந்து திருமணம் நிகழ்ந்த மறுதினமே தீர்த்தவாரி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றபின் மீண்டும் கருவறைக்குள் பிரவேசித்துவிடுகிறார்.
அதன்படி திருவாதிரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலையில் கோயிலில் சுவாமி சந்நிதி மகாமண்டபத்தில் வேணுவனநாதர் மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago