திமுக ஆட்சியில்தான் கிராம மக்கள் சபைக் கூட்டங்கள் தடுக்கப்பட்டன என்று, கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வாவிபாளையம் பகுதியில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பாஜக என்பது தலைவர்களும், தொண்டர்களும் சமமாக நடத்தப்படுகிற இயக்கம். தமிழகத்தில் தாமரை மலருமா என்று கேட்டவர்களுக்கு மத்தியில், தற்போது தாமரை இல்லாமல் ஆட்சி மலருமா என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. இது, வரும் நாட்களிலும் மக்கள் நலனில் அக்கறை உள்ள கூட்டணியாக விளங்கும்.
ஆட்சியில் இருந்தபோது செய்யாததை எல்லாம், ஆட்சியில் இல்லாதபோது திமுகவினர் செய்வார்கள். கிராமங்களில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்துவதன் மூலமாக, அவர்களின் நலனை காப்பதுபோல காட்டிக் கொள்கின்றனர். ஆனால், திமுக ஆட்சியில்தான் மக்கள் சபை கூட்டங்கள் நடத்துவது தடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல்தான் புதிய மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளார். அவரது இயக்கம் தொடங்கப்பட்டு கொள்கை, திட்டங்களை அறிவித்தபிறகே, எந்த திசையில் பயணிக்க விரும்புகிறார் என்பது புரியும். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதுபோல, தமிழக பாஜகவின் கருத்துகள் சில நேரங்களில் முரண்பட்டதுபோல தெரியலாம். ஆனால், மத்தியில் என்ன சொல்கிறார்களோ அதை தமிழகத்தில் செயல்படுத்தி முடிப்பதே எங்களது வேலை. இது அதிமுகவினருக்கும் தெரியும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago