கரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுமார் 9 மாத காலமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சாரல் சீஸனை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள், தற்போது குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக குற்றாலத்தில் வியாபாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துச் செல்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.
லேசான மழை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. பாபநாசத்தில் 5 மி.மீ., சேர்வலாறில் 2 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.பாபநாசம் அணை நீர்மட்டம் 142.40 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.88 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 111 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் இருந்தது. கடனா நதி அணை நீர்மட்டம் 83.30 அடியாகவும், ராம நதி அணை நீர்மட்டம் 81 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 65.62 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 81 அடியாகவும் இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago