வேலூரில் மாற்றுத்திறனாளியான அதிமுக பிரமுகரின் பெட்டிக்கடையை எடுத்துச் சென்ற அதே கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகாரளிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கந்தசாமி என்ற மாற்றுத்திறனாளி அளித்த மனுவில், ‘‘வேலூர் அரசமரப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான நான், கடந்த 1980-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறேன். குடும்ப வறுமை காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெட்டிக் கடை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தேன்.
அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்பேரில் தங்கக்கோயில் எதிரே தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்த மான இடத்தில் பெட்டிக் கடை வைத்துக்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வெளி நபர்களிடம் கடன் வாங்கி இரும்பு பெட்டிக் கடையை குறிப்பிட்ட இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறக்கி வைத்தேன். மறுநாள் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் பெட்டிக் கடையை காணவில்லை.
அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, என்னுடைய அனுமதி இல்லாமல் கடை வைக்கக்கூடாது என்று கூறினார்.
எனவே, அவரிடம் இருந்து எனக்குச் சொந்தமான பெட்டிக் கடையை மீட்டுக் கொடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை அனுமதியளித்த இடத்தில் நான் மீண்டும் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவின் மீது அரியூர் காவல் துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago