திருச்சியில் மழைநீர் வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூரை அடுத்த அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(28). பெயின்டர். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு மகன் யஷ்வந்த்(5) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விளையாடச் சென்ற யஷ்வந்த், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அன்றிரவு 9 மணியளவில் அந்தத் தெருவில் உள்ள 7 அடிக்கும் மேல்ஆழமான- தற்போது சாக்கடையாக ஓடும்- மூடப்படாத மழைநீர் வடிகாலில் யஷ்வந்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த தில்லைநகர் போலீஸார் யஷ்வந்த்தின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் கூறும்போது, “விபத்து அபாயம் உள்ளதால், இந்த சாக்கடை ஓரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கவோ அல்லது சிலாப்புகள் கொண்டு மூடவோ நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது உயிர்பலி ஏற்பட்டுள்ளது” என்றனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் கூறியது:

மழைநீர் வடிகால்கள் என்று மாநகராட்சி அலுவலர்களால் அழைக்கப்படும் சாக்கடைகள், பெரும்பாலும் சாலை மட்டத்துக்கு இணையாகவும், சில இடங்களில் சாலையைவிட தாழ்வாகவும், பெரும்பாலான இடங்களில் மூடப்படாமலும் உள்ளன. குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள சாக்கடைகளைக்கூட சிலாப்புகள் கொண்டு மூடவோ, தடுப்புக் கம்பிகள் அமைக்கவோ மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை. இதன்காரணமாகவே சிறுவன் யஷ்வந்த் உயிரிழந்துள்ளார்.

அண்மையில், சென்னையில் தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டியிருந்த- மூடப்படாத மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து தாய்- மகள் உயிரிழந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டதைப்போல, யஸ்வந்த் இறப்பு குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, “திருச்சி மாநகரில் 850 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் உள்ளது. இதில், இதுவரை 75 கிமீ நீள வடிகால் சிலாப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. அபாயம் விளைவிக்கும் வகையில் உள்ள மழைநீர் வடிகால்கள் சிமென்ட் சிலாப்புகளால் மூடப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்