பிரிட்டனில் இருந்து ஈரோடு திரும்பியுள்ள 16 பேருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள தாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், சமீப நாட்களில் அங்கிருந்து திரும்பியவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து 16 பேர் ஈரோடு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
பிரிட்டனில் இருந்து ஈரோடு திரும்பிய 16 பேருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய வைரஸ் தொற்றின் தாக்கம் அவர்களுக்கு உள்ளதா எனக் கண்டறிய மீண்டும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பின், புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி, வைரஸின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய 16 பேரும் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அவர்கள் சென்று வந்த இடங்களில் வசிப்பவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது உடல் நிலை குறித்து சுகாதாரத்துறையினர் நாள்தோறும் கண்காணித்து வருகின்றனர், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago