ஆசனூர் வனச்சரகத்தில் செயல்படாத குவாரிகளில் பதுங்கிய சிறுத்தையைப் பிடிக்க மூன்று இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, பீம்ராஜ் நகர் ஆகிய கிராமங்களில் உள்ள ஓடைகள் மற்றும் செயல்படாத குவாரிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், சிறுத்தையைப் பிடிக்க மூன்று கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கேமராக்கள் மூலம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள செல்படாத குவாரிகளில் பெரிய கற்குகைகள் இருப்பதால், சிறுத்தை மற்றும் வனவிலங்குகள் அதனை தங்கள் வாழ்விடமாக பயன்படுத்த ஏதுவாக உள்ளது. ஓடைப்பகுதிகளில் அதிக புதர்செடிகள் இருப்பதால், வனவிலங்குகள் மறைந்து வாழ முடிகிறது.
இப்பகுதிகளில் தாளவாடி வனச்சரக அலுவலர் தலைமையில் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், ஓசை எழுப்பியும் சிறுத்தையைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
சிறுத்தை பிடிபடும் வரை, இரவு நேரங்களில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளை திறந்த வெளியில் விடாமல் பாதுகாக்க வேண்டும் என வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago