திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் நேற்று 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் திருச்சி மாவட்டத்தில் 58 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளன. முதல் கட்டமாக திருச்சி மாநகரில் தென்னூர் மின் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் அருகில், சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெரு மற்றும் ஊரகப் பகுதியில் தாயனூர் ஆகிய 3 இடங்களில் மினி கிளினிக்குகள் நேற்று திறக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மினி கிளினிக்குகளை திறந்துவைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் என்.நடராஜன் பேசும்போது, ‘‘சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்றவற்றுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. இந்த மினி கிளினிக்குகள் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பேரூராட்சி, ஊராட்சிப் பகுதியில் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 7 மணி வரையும் செயல்படும். வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறையாகும்’’ என்றார்.
நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் மு.பரஞ் ஜோதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு- கட்டுப்பாடு அலுவலர் எஸ்.லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எ.சுப்பிரமணி, நகர் நல அலுவலர் எம்.யாழினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வெள் ளூர், திருமழபாடி, சிலுப்பனூர், கங்கைகொண்டசோழபுரம், தண்டலை ஆகிய கிராமங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், சுகாதாரப் பணி கள் துணை இயக்குநர் வீ.சி.ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் அரியலூர் செந்தமிழ்செல்வி, திருமானூர் சுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago