திருப்பத்தூர் கிடங்கில் வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் திருட்டு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் உள்ள சிகரெட் ஏஜென்சி கிடங்கில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் நகர் டாக்டர். சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முரளி(40). இவர், ஈத்கா மைதானம் சாலையில் சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக, ஏஜென்சி அலுவலகம் அருகே கிடங்கு ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அலுவலகம் மற்றும் கிடங்கை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 10.30 மணியளவில் கிடங்கை திறந்தபோது பின்பக்கம் உள்ள ஷெட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அங்குள்ள பொருட்களின் இருப்பை சரிபார்த்தபோது ரூ.35 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. உடனே, கிடங் கில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதிகாலை 1.40 மணிக்கு பின்பக்க ஷெட்டரை உடைத்து உள்ளே வந்த 3 பேர் கொண்ட மர்மநபர்கள்அங்கிருந்த சிகரெட் பண்டல்களை திருடிக்கொண்டு காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி யிருந்தன.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முரளி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஷெட்டரை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்