சமையல் எரிவாயு விலை உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ.ராதிகா தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்துவரும் ஏழை மக்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளை ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகனிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் மைதிலிதலைமை வகித்தார். செயலாளர்பவித்ரா தேவி, மாநில செயற் குழு உறுப்பினர் சாவித்ரி உள்ளிட்டநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுக மகளிரணி
கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் சாந்திதேவி தர்மராஜன் தலைமை வகித்தார்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும், மண் அடுப்புகளில் சமைப்பது போலவும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில், திமுக-வைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதே போல கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago