எனது குடும்பத்திலிருந்து என்னைத் தவிர இனி யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதிபடக் கூறுகிறேன், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம் பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரான தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்துப் பேசியதாவது:
பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதிமுக தலைமையிலான அரசு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பான திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக, சாமானியர் ஆளும் ஆட்சியாக இருப்பதால் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த கட்சிக்கு வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதற்கு இதுவே உதாரணம்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் மே மாதம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் சட்டக் கல்லூரியும், குமாரபாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைய உள்ளது.
அதிமுக தலைமை அறிவித்தால் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் நான் போட்டியிடுவேன். ஆனால் ஒருசிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எனது மகனை இந்த தொகுதிக்கும், நான் பரமத்திவேலூரிலும் போட்டி யிடுவதாக தகவல் வெளியானது.
என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் இனிமேல் அரசியலுக்கு வர மாட்டார்கள் என அறுதியிட்டு கூறுகிறேன்.
எந்த நேரத்திலும் என்னை பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். நான் தொண்டர்களையும் கட்சியையும் நம்பித்தான் செயல்பட்டு வருகிறேன். இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காக தான் எனது மகன் பணியாற்றி வருகிறார். அரசியல் பதவிகள், கட்சி பதவிக்கு எனது மகன் வரமாட்டார். எனது குடும்பத்திலிருந்து என்னைத் தவிர இனி யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதிபடக் கூறுகிறேன், என்றார்.
நாமக்கல் மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago