மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2-ம் ரீச் பகுதி விவசாயிகள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
நடப்பு ஆண்டில் மணிமுத்தாறு பிரதான கால்வாய் மூலம் கடந்த 9-ம் தேதி முதல் விநாடிக்கு 445 கனஅடி வீதம் 3 மற்றும் 4-வது ரீச் பகுதிகளுக்கு மட்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2-ம் ரீச்பகுதி விவசாயிகள் அணை நீரை எதிர்பார்த்து 4 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். பாசன குளங்களில் தண்ணீர் குறைந்துவிட்டது. எனவே, மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 2-ம் ரீச் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் வெ.நாராயணன் அளித்த மனுவில், “பாளையங்கோட்டை, களக்காடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ளனர். ஆனால், குளங்களில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே, மணிமுத்தாறு அணை தண்ணீரை ரீச் 1 மற்றும் 2-வது கால்வாய்களில் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இடிந்தகரை மக்கள்
இடிந்தகரை நல கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் அளித்த மனுவில், “ விஜயாபதி கிராமத்தில் அரசு சட்ட விதிகளுக்கு புறம்பாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதிக சக்தி கொண்ட வெடிபொருட்களை பயன்படுத்துவதால் அருகிலுள்ள குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் பெரிய அளவில் கல்குவாரிகள் நடத்தக் கூடாது என்ற விதியிருக்கும் நிலையில், அதை மீறி கல்குவாரிகள் செயல்படுகின்றன. கல்குவாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா அளித்த மனுவில், “மேலப்பாளையத்தில் குடும்பஅட்டைதாரர்களுக்கு கொண்டைக் கடலை வழங்காமல் இழுத்தடிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டைக் கடலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago