தி.மலை மாவட்டம் போளூர் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள சனி பெயர்ச்சி பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஏரிக்குப்பத்தில் சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. கோயில் அருகே உள்ள குளத்தில் நீராடியும், பரிகார ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் செய்தும் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். மேலும், சனிக் கிழமைகளில் சனிதோஷம் நீங்க, சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது எள் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இதேபோல், சனி பெயர்ச்சி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் சனிபெயர்ச்சி வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வர வேண்டாம். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்குவது, பரிகார ஹோமங்கள், எள் தீபம் ஏற்றுதல், குளத்தில் நீராடுதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறாது.
அதே நேரத்தில் சனிபெயர்ச்சியை யொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். கரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago