புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஐஎன்டியுசி-யுடன் இணைவு பெற்ற தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கா.இளவரி தெரிவித்தார்.

இந்தச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பழனி தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எம்.வெங்கடேசன், மாநில பொருளாளர் ஜெ.ஜெயபால் கண்மணி, மாநில அமைப்புச் செயலாளர் பா.ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொள்முதல் நிலைய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து பணி நிலைகளிலும் பதவி உயர்வு தகுதிப் பட்டியலை உடனே தயார் செய்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கா.இளவரி, செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்போது ஒப்பந்ததாரருக்கான தகுதிகள் இல்லாதவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய முடியாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு 2020-ம் ஆண்டில் கொண்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டிலேயே இந்தியாவில் 5.45 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 19 கிடங்குகளை 2 பெரு நிறுவனங்கள் கட்டியது எப்படி? வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்