கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள். வீடுகள், கால்நடைகள் இழப்பு குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட புயல் தொடர் மழையின் காரணமாக கடலூர், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்குடி, திருமுட்டம், விருத்தாச்சலம், நல்லூர், மங்க ளூர், கம்மாபுரம், அண்ணாகிராமம் ஒன்றியங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டர் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மணிலா, உளுந்து, கரும்பு,பொங்கல் கரும்பு, எள், மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் சேதமடைந்துள்ளது. சேத மடைந்த பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், வாழைக்கு ஏக்க ருக்கு ரூ. 50 ஆயிரம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 50,ஆயிரம் மற்ற பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
கோயில் மடம் அறக்கட் டளைக்கு சொந்தமான நிலங்களில் பயிரிடக் கூடிய குத்தகை விவசா யிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஆயிரக் கணக்கான வீடுகள் மழையினால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முழுவதும் சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்டுவதற்கு பசுமை வீடு கட்டும்திட்டத்தில் நிதி ஒதுக்கிட வேண்டும்.குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுக ளாக மாற்ற திட்டமிட வேண்டும்.
பல கிராமங்களில் கழிப் பிட வசதி இல்லாததால் மழைநீர் தேங்கியுள்ளதால் வெளிப்புறங் களில் செல்லும் பொழுது மிகமோசமான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மக்கள் அவதிப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு திட்டமாக கழிவறையை கட்டித் தருவதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும்.
உயிரிழந்த ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago