ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பாக நேற்று அம்மா நகரும் நியாய விலைக் கடையின் செயல்பாட்டை, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் பொருட்டு, தமிழகத்தில் 3501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்தக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
அதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 11,205 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். மாவட்டத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க இயலாத இடங்களில் கூட அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, துணைப் பதிவாளர் ராஜவேலன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், ராம்கோ மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago