சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு அரசு நினைவு மண்டபம் கட்டித் தர வேண்டும் என அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அருந்ததியர், பட்டியலின மக்களின் கட்சிகள் மற்றும் அருந்ததியர் இயக்கங்களின் சார்பில் அருந்ததியர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. பொல்லான் பேரவை அமைப்பாளர் வடிவேல் ராமன் தலைமை வகித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தமிழகத்தில் பட்டியலின மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு அருந்ததியர் உள்ளனர். இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3 சதவீதம் உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் அருந்ததியர் வேட்பாளர்களுக்கு அனைத்து கட்சியினரும் வாய்ப்பளிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கும், சுதந்திரப் போராட்ட வீரமங்கை குயிலிக்கு சிவகங்கையிலும் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அருந்ததியர் இன மக்களுக்கென, தனியாக, அருந்ததியர் நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago