“கால்வாய்கள், மடைகளை பழுது பார்க்காததால் குளங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என, குறைதீர் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வரை பெறவேண்டிய இயல்பான மழையளவு 814.80 மி.மீ. இவ்வாண்டு கடந்த 17-ம் தேதி வரை 695.37 மி.மீ. மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது இவ்வாண்டின் சராசரி மழை அளவைவிட 15 சதவீதம் குறைவாகும். தற்போது அணைகளில் 84.44 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 91.42 சதவீதம் நீர் இருந்தது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 14,261 ஹெக்டேரில் நெல், 757 ஹெக்டேரில் சிறு தானியங்கள், 6,629 ஹெக்டேரில் பயறுவகை பயிர்கள், 653 ஹெக்டேரில் பருத்தி, 31 ஹெக்டேரில் கரும்பு, 674 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளன.
காப்பீடு செய்யலாம்
பிசான பருவ நெல் பயிரானது விதைப்பு முதல் வளர்ச்சி பருவம் வரை உள்ளது. சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 2020-2021 -ம் ஆண்டில் மக்காச்சோளம் பயிருக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கு பயிர் காப்பீடு நிறுவனமாக இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.268.50 செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜனவரி 18 ஆகும்.ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பூலம், விஜயநாரா யணம், முன்னீர்பள்ளம், ராதாபுரம், சமூகரெங்கபுரம், திசையன்விளை, லெவிஞ்சிபுரம், பழவூர், பணகுடி, வள்ளியூர் குறுவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்யலாம்.
வேளாண்மைத்துறையின் அனைத்து திட்டங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்துகொள்ள ஏதுவாக உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இம்மாதம் முதல் கிராம அளவில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மராமத்து பணிகள்
“மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வரத்து கால்வாய்கள், மடைகள், மதகுகளை பழுதுபார்க்கவில்லை. இதனால் குளங்களுக்கு தண்ணீர் வந்து சேருவதில் தடைகள் உள்ளன. எனவே, நீர் நிலைகளில் மராமத்து பணிகளை சரிவர செய்ய வேண்டும்” என்று, விவசாய பிரதிநிதி பி.பெரும்படையார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 32 பேர் கடும் குளிரில் உயிரிழந்தது குறித்தும் கூட்டத்தில் விவசாயி சொரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டனர்.
களக்காடு பகுதியில் வாழை கொள்முதல் நிலையம் மற்றும் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
பதில் அளிப்பதில்லை
“விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பார்கள். காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறுவதால் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. எனவே, அடுத்த கூட்டத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்” என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago