பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகக்குழு கலைப்பு நிர்வாக கட்டிடத்துக்கு ‘சீல்’ - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிரடி

By செய்திப்பிரிவு

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு அதன் நிர்வாக கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அடுத்து வரும் 10 நாட்களில் புதிய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கணக்கு தணிக்கை ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவருமான சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குண சுந்தரி (கணக்குகள்), விஜய ராகவன் (பொது), வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் ‘‘செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் அளித்துள்ள பல்வேறு புகார் களின் அடிப்படையில் சங்கத்தின் நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது. அதன் நிர்வாக கட்டிடங்கள் ‘சீல்’ வைக்கப்படும். வரும் 10 நாட்களுக்குள் புதிய நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். சிலர் செஞ்சிலுவை சங்கத்துக்கு வரப்பெற்ற நிதியில் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதால், அது தொடர்பாக வேலூர் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலைமையில் வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஆவணங்களை பறிமுதல் செய்து அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து, சத்துவாச்சாரியில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவமனையில் ஆய்வு செய்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர், வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்து ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததுடன், அங்கு நிர்வாக விதிகளுக்கு மாறாக வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்றையும் அப்புறப்படுத்தினர். இந்த மூன்று கட்டிடங்களும் வேலூர் வருவாய் கோட்டாட்சி யரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தின் நிர்வாகக் குழுவையும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலைத்துள்ளார். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘செஞ்சிலுவை சங்கத்துக்கு வரப்பெற்ற நிதி குறித்து புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதுகுறித்து, விசாரணை நடத்திய பிறகே முழு விவரம் தெரியவரும். மேலும், சிலர் தனிப்பட்ட முறையில் ஆட்சியரின் கவனத்துக்கு சில புகார்களை கொண்டு சென்றுள்ளனர். நிர்வாகிகள் இடையில் ஒற்றுமை இல்லாததால் தற்போதைய குழு கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். செஞ்சிலுவை சங்க கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள உணவகத்துக்கான வாடகை தொடர்பான புகார்களும் வந்துள்ளது’’ என தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த இந்தர்நாத் கூறும்போது, ‘‘சங்கத்தில் நிதி முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. நிர்வாகிகளை கலந்து ஆலோசனை நடத்துவது இல்லை என சிலர் புகார்களை கூறியுள்ளனர். சில முக்கிய முடிவுகளில் தெளிவான ஒழுங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரிடமும் ஆலோசனை நடத்தவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்