காஞ்சிபுரம் கதர் வாரிய முன்னாள் கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம், விஜிராவ்நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு(65). இவர் காஞ்சிபுரம் கதர் கிராம தொழில் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இவர் பதவியில் இருந்தபோது போலியான கணக்கு எழுதி மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் அந்த வாரியத்தின் துணைப்பதிவாளர் கடந்த 2006-ம் ஆண்டு புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அப்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னக்கண்ணுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அந்த நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு சின்னக்கண்ணுவை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கயல்விழி, குற்றம்சாட்டப்பட்ட சின்னக்கண்ணு மீதான நம்பிக்கை மோசடி,அரசு துறையை ஏமாற்றியிருப்பது, போலியான ஆவணங்கள் தயாரித்தது என்பன உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 33 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago