கீழ்பவானி பிரதான வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் மறைமுக பாசனமும் பெறுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.178 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்த கோபியை அடுத்த கடுக்காம்பாளைத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக் காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவு நீர் மூலம் பாசனம் பெறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனம் ஆகும் சூழ்நிலை உள்ளதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபடவும், சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்பவானி பாசன பகுதிகளில் உள்ள10 தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago