குமாரபாளையத்தில் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
குமாரபாளையத்தில் சிறு சாயப்பட்டறைகள் இயங்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக 3 மாதம் மற்றும் தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் 15 நாட்கள் சாய ஆலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சாய ஆலைகளை நிறுத்தினால் விசைத்தறி தொழிற்கூடங்கள் செயல்பட நூல் இல்லாமல் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும். மத்திய அரசு சட்டப்படி 2,300 டிடிஎஸ் அளவு உப்புத்தன்மை கொண்ட சாய நீரை நீர் நிலைகளில் கலக்கலாம். குமாரபாளையம் சாயப்பட்டறைகளில் வெளியேறும் சாயநீரின் உப்புத்தன்மை 1,800 டிடிஎஸ் அளவுதான் உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து நெருக்கடி தருவதால் விசைத்தறிகள் இயங்கவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தீபாவளிக்கு தரவேண்டிய போனஸ் பல இடங்களில் தராமல் பொங்கலுக்கு தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினரின் அறிவிப்பால் பொங்கலுக்கும் போனஸ் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு சாயப்பட்டறைகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago