அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆட்சியர் த.ரத்னா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பழனிசாமி, ரூ.36.73 கோடி மதிப்பிலான முடிவுற்ற 39 பணிகளை திறந்து வைத்து, ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.129.34 கோடி மதிப்பில் 21,504 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, ரூ.19.25 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.24.41 கோடி மதிப்பில் நிறைவடைந்த 4 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1,614 பயனாளிகளுக்கு ரூ.23.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது: மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் சிறப்பாக செயல்பட்டதால் அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
ராஜேந்திரசோழனுக்கு சிலை மற்றும் மணிமண்டபம், சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளுக்கு தனிசாலை, கொள்ளிடத்தில் தடுப்பணை ஆகியவை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்தது:
தமிழகத்திலேயே மிக மிக குறைவான கரோனா தொற்றாளிகள் கொண்ட மாவட்டம் என்ற சிறப்பை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதற்காக இம்மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன். திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் பொருளாதார நெருக்கடியால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், மாநில அரசே அத்திட்டத்தை செயல்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறது. பாடாலூரில் ஜவுளி பூங்கா அமைக்கவும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர அரசு தயாராக உள்ளது. ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.340 கோடி செலவாகிறது.
பெரம்பலூர் மாவட்டம் 2 சட்டப் பேரவை தொகுதிகளை மட்டுமே கொண்ட மிகச்சிறிய மாவட்டம். இங்கிருந்து 30 கி.மீ தொலைவில் அமைய உள்ள அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இம்மாவட்ட மக்கள் சிகிச்சை பெறலாம். அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மாநில அரசின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. மேலும், உயர் நீதிமன்றம் வரம்பில்லாமல் மருத்துவக் கல்லூரி தொடங்கி அதன் மதிப்பை கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அதிமுக முயற்சி மேற்கொள்ளும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago