தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறும்போது, “கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. கடந்த ஓராண்டில் சுமார் 200 தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகள் வராமல் தடுக்க சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்.கடையம் வட்டாரத்தில் நடப்பு பிசான பருவத்தில் 4,200 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 140 ஹெக்டேருக்கு மட்டும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தெரியவருகிறது. இயந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள் அனைவருக்கும் ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாய நிலங்களின் வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால், அறுவடை இயந்திரங்களை இயக்க முடியவில்லை. தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.
மேல ஆம்பூர், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 340 ஹெக்டேரில் கார், பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
காட்டுப் பன்றிகளால் பயிர்ச் சேதம் அதிகரித்து வருகிறது. 100 சதவீத மானியத்தில் விவசாய நிலங்களைச் சுற்றி சோலார் மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடைக் காலம் நெருங்குவதால் புளியரை, வாசுதேவநல்லுர், சிவகிரி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும். வாசுதேவநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்” என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் சமீரன் கூறும்போது, “கடந்த 2018-19ம் ஆண்டு தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க சோலார் மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago