செய்யாறு அருகே விவசாயிகள் நூதன போராட்டம்

By செய்திப்பிரிவு

செய்யாறு அருகே புயலுக்கு சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து விவ சாயிகள் நேற்று நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ ஆகிய இரண்டு புயல்களால் கன மழை பெய்தது. இதனால், பல ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள், கரும்பு, வாழை உட்பட பல்வேறு வகை பயிர்கள் சேதமடைந்தன. பயிர் சேதம் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்தும், மத்திய குழுவினர் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பார்வையிடாததைக் கண்டித்தும் செய்யாறில் நேற்று விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் செய்யாறு அடுத்த நாவல் கிராமத்தில் நடைபெற்ற போராட் டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து, நீர்நிலையோரத்தில் பயிர்கள் உயிரிழந்து விட்டதாக கூறி எள்ளும், தண்ணீரும் விட்டு 18-ம் நாள் ஈமச்சடங்கு (காரியம்) செய்தனர். மேலும் அவர்கள், பயிர்களை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டிக்கும் வகை யில், ஓடையில் காகித கப்பலை விட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது விவசாயிகள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை முழுமையாக பார்வையிடாத வேளாண் துறை அதிகாரிகள், 20 சதவீதம் மட்டுமே சேதமடைந்துள்ளதாக அரசுக்கு கணக்கு கொடுத்துள்ளனர். முழுமையான கள ஆய்வு செய்து உண்மை தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்