சங்கராபுரம் அருகே மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
சங்கராபுரம் அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் அமைந்துள்ள மணிமுக்தா அணையின் நீர்மட்டம் 36 அடியில் 35.5 அடி உயரம் நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவு 736. 96 மில்லியன் கன அடியாகும். மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை, சட்டத்துறை அமைச்சர் சிவி சண் முகம் நேற்று திறந்து வைத்தார். பாசனத்திற்கு விநாடிக்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்
அணை திறப்பிற்காக அமைச்சர் சி.வி. சண்முகம் திண்டிவனத்திலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றார். அப்போது விழுப்புரம் புறவழிச்சாலையில் விராட்டிக்குப்பம் பாதை அருகே, பைக்கில் சென்ற ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த பாவாடை என்பவர் மகன் வெங்கடேசன்(27) விபத்தில் சிக்கி காயத்துடன் கிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர். இதை அறிந்த அமைச்சர் சிவி.சண்முகம், போலீஸாரின் பாதுகாப்பு வாகனத்தில் வெங்கடேசனை ஏற்றி அனுப்பினார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, எம்எல் ஏக்கள் குமரகுரு, பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநிலத்தலைவர் ராஜசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
5,493 ஏக்கர் பயனடையும்
ஜனவரி 31-ம்தேதி வரை இப்பகுதியில் பழைய, புதிய பாசனத்திற்கு 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த 45 நாட்களுக்கு, அதாவது பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 23- ம் தேதி வரை பழைய ,புதிய வாய்க்கால் பகுதிக்கு 71 கனஅடி தண்ணீர் திறக்கப்படும்.இதனால் 10 கிராமங்களுக்கு உட்பட்ட, 5,493 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். இப்பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்டதால், கூடுதலாக 4,250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago