விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3-வது நாளாக நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 83 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், துரை, விவசாய அணி மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி, மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை திரண்டனர். இவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால், அனுமதி கிடையாது எனக் கூறி போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஷீலா மேரி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜாய்சன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்