விவசாயிகளுக்கு ஆதரவாக 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் முன் 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகுரு, சிஐடியு சுடலைராஜ், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் நல்லதம்பி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2-வது நாளாக விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு, காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அங்குள்ள அணுகுசாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவண முத்துவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை போலீஸார் கைது செய்ய முயன்றதால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 4 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்