கோவை கூட்ஸ் ஷெட் சாலையில் பழைய பாதாள சாக்கடை குழாய் உடைந்து பள்ளம்

By செய்திப்பிரிவு

கோவை பெரியகடைவீதியில் இருந்து கூட்ஸ் ஷெட் சாலை வழியாக, அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு வழித்தடம் செல்கிறது. இந்த மேம்பாலம் தொடங்கும் பகுதிக்கு இடது மற்றும் வலதுபுறங்களில் அணுகு சாலை உள்ளது. இந்த சாலையில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு, அப்போதைய உள்ளாட்சி அமைப்பு சார்பில் 600 மில்லி மீட்டர் கொண்ட சிமென்ட் பாதாள சாக்கடைக் குழாய்கள், இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களையே தற்போதும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பராமரித்து வருகிறது.

இந்நிலையில், கூட்ஸ் ஷெட் சாலையில் மேம்பாலத்தின் இடதுபுறம் உள்ள அணுகுசாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைக் குழாய் அழுத்தம் தாங்காமல் சில மீட்டர் தூரத்துக்கு நேற்று உடைந்தது. இதனால் அங்கு சுமார் 7 அடி ஆழம், 15 அடி அகலத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வெரைட்டிஹால் சாலை போலீஸார், அந்த சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி தலைமையிலான குழுவினர், சேதமடைந்த குழாயை அகற்றி, புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் கருப்பசாமி கூறும்போது, "பழைய பாதாள சாக்கடைக் குழாய் என்பதால், அழுத்தம் தாங்காமல் உடைந்துள்ளது. 40 மீட்டர் தூரத்துக்கு உடைந்த இந்தக் குழாயை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய குழாய் பதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்