காவலர், தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு கோவை, திருப்பூரில் 14,550 பேர் பங்கேற்பு

கோவை, திருப்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 14,550 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கோவையில் 6 மையங்களில் நேற்று இத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 10,207 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதையொட்டி, தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிந்து வந்த தேர்வாளர்களின் உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் மூலம் கைகழுவிய பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 8,663 பேர் தேர்வெழுதினர். மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

திருப்பூர்

திருப்பூரில் 5 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 6,833 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 5,887 பேர் தேர்வெழுதினர். 946 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உள்ளிட்டோர் தேர்வு மையங்களில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்