வானூர் அருகே வட்டார போக்குவரத்து துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் இல்லாத பணம் சிக்கியது

By செய்திப்பிரிவு

வானூர் அருகே ஒழிந்தியாம்பட்டில் உள்ள தமிழக எல்லைப் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற்றுச்செல்ல அனுமதி கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது.

இங்கு கார், லாரி போன்ற வாகனங்களுக்கு ரூ.100, சரக்கு வாகனங்களுக்கு ரூ.200, சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.300 என்று அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சோதனைச்சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட வாகன அனுமதி கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் ஒழிந்தியாம்பட்டு சோதனைச் சாவடிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை காலை 8 மணிக்கு முடிவடைந்தது.

இந்தச் சோதனையின் முடிவில் சோதனைச்சாவடி அலுவலக அறையில் இருந்து ரூ.5,500, பதிவறையில் இருந்து ரூ.7 ஆயிரம், வாகன டிரைவர்கள் 2 பேரிடம் இருந்து ரூ.3,500 என மொத்தம் ரூ.16 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொகைக்கு சோதனைச்சாவடி அலுவலக அதிகாரிகளால் உரிய கணக்கு காட்ட முடியவில்லை.

விசாரணையில், 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்ததன் மூலம் இந்த தொகை கிடைக்கப் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து கணக்கில் வராத ரூ.16 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்