சீருடைப் பணியாளர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நாமக்கல்லில் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாளை (13-ம் தேதி) நடக்கிறது. இத்தேர்வில் ஒரு திருநங்கை உட்பட 8538 பேர் பங்கேற்கின்றனர்.
திருச்செங்கோடு, எளையாம் பாளையம், விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மற்றும் கேஎஸ்ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகங்களில் நாளை (13-ம் தேதி) காலை 11 மணி முதல் 12.20 மணி வரை இத்தேர்வு நடக்கவுள்ளது. தேர்வு எழுதுவோர் வசதிக்காக நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
தேர்வுக்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து நாமக்கல் எஸ்பி எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:
தேர்வு எழுத வருபவர்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார். விண்ணப்ப தாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வருவது உகந்தது.
நாளை காலை 8 மணி முதல் தேர்வு அறைக்கு உரியவாறு சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படுவர். 11 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், புளுடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள், பென்சில், அழி ரப்பர், கைப்பை போன்ற பொருட்களும் அனுமதிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் விடைத் தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். பென்சில் கொண்டு வரக்கூடாது. எக்காரணம் கொண்டும் தேர்வு எழுதும் மையத்திற்குள் செல்போன் அனுமதிக்கப்படாது. தேர்வு எழுத வரும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago