நலவாரியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதந்தோறும் கூட்ட வேண்டுமென அரசுக்கு ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புக் கூட்டம், சத்தியமங்கலத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பெரியசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர்கள் மாதேஸ்வரன், வெங்கடாசலம், கந்தசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சு.மோகன்குமார், துணைத்தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்டுமானத் தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகளை அதிகரிக்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் நவவாரியத்தில் கடந்த சிலமாதங்களாக நடந்துவரும் ஆன்லைன் மூலமான உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் சமர்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேசி அவற்றுக்கு தீர்வு காண்பதோடு, பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் சமர்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும்.
நலவாரியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், நலவாரியச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நீண்ட காலமாக கூட்டப்படாமல் உள்ளது. ஆகவே, அதனை உடனடியாக கூட்டுவதோடு, அரசாணைப்படி மாதந்தோறும் அக்கூட்டத்தை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago