விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிடக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் செல்வநம்பி தலைமை வகித்தார். விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் பேசினார். மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் வீர.செங்கோலன், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர்மன்னன், நகரச் செயலாளர் தங்க சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் பெ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தனபால் உள்ளிட்டோரும், குளித்தலை பேருந்து நிலையம் அருகே நகரச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் திரளானோரும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விடுதலைக்கனல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய தொழிலாளர் இயக்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் நாகப்பன், மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) உறவழகன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் எதிரில் கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் என்.டி.இடிமுரசு, நாகை தலைமை தபால் நிலையம் முன் கட்சியின் மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் முருகையன் ஆகியோர் தலைமையில் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல, நாகை அவுரித் திடலில் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமரின் உருவ பொம்மையை எரித்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்