கரும்புக்கான நிலுவைத்தொகை டிச. 31-க்குள் பட்டுவாடா ஆட்சியர் நடவடிக்கையால் போராட்டம் வாபஸ்

By செய்திப்பிரிவு

ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், `கரும்புக்கான நிலுவைத் தொகை வரும் 31-ம் தேதிக்குள் வழங்கப்படும்’ என, ஆலை நிர்வாகம் உறுதியளித்ததால், விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த2018-19ம் ஆண்டு அரவை செய்தகரும்புக்கு உரிய பணம் ரூ.23.72 கோடியை 15 சதவீத வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும். 2019-20ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.137.50 உடனடியாக வழங்க வேண்டும். 2020-21ம் ஆண்டு அரவை செய்யும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம்வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்கவேண்டும். 2004 முதல் 2008 வரையிலான லாபப்பங்கு 10 கோடியைவிவசாயிகளுக்கு பட்டுவாடாசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் 2018-19ம் ஆண்டுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த ஒருடன் கரும்புக்கு ரூ. 2,612.50-ஐ, 18கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும், 21 தனியார் சர்க்கரைஆலைகளும் வழங்கிவிட்டன.

ஆனால், தரணி ஆலைநிர்வாகத்தின் கீழ் உள்ள 3 ஆலைகள் மட்டும் விவசாயிகளுக்கு பணம்வழங்காமல் 21 மாதங்களாக ஏமாற்றி வருகிறது. கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்” என்றனர்.

போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினரை, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி கூறும்போது, “வரும் 31-ம் தேதிக்குள் கரும்புக்கான நிலுவைத் தொகையை ஆலைநிர்வாகம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து,போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்