திருநெல்வேலி டவுனில் மழைநீர் வழிந்தோட முடியாத நிலையில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த கழிவுநீர் கால்வாய்களுக்கு மத்தியில் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் பிடிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது. இது தொடர்பாக, திருநெல்வேலி வாசகர் செய்யது முகைதீன் `இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதியில் புகார் தெரிவித்திருந்தார்.
அவர் கூறும்போது, ``திருநெல் வேலி மாநகரத்தில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் சிறுமழைக்கே நகர் முழுக்க வெள்ளம் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நிர்வாகம் வடிகால் வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாநகரில்சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஏறக்குறைய ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை எழுப்புகிறார்கள். அதேநேரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலைகள், வடிகால்வசதி மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்றெல்லாம் அடிப்படையான விஷயங்களில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருக்கிறது.
மாநகரில் மழைக் காலங்களில் தாழ்வான இடங்களில்தண்ணீர் தேங்கி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுவது வாடிக்கையாகிவிட்டது. பல இடங்களில் சாலையோர கால்வாய்கள் தூர்வாரப்படாமல் சிதிலமடைந்திருப்பதால் இப்பிரச்சினையை மக்கள் ஆண்டுதோறும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
குறிப்பாக திருநெல்வேலி டவுன் பகுதிகளில் சாலையோர கழிவுநீரோடைகள் நிரம்பி சாலைகளில்வழிந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழைக் காலங்களில் மழைநீரும், சாக்கடையும் கலந்து சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கிவிடுகிறது. டவுன் தெப்பக்குளம் கீழத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடைகள் நிரம்பியிருக்கும் நிலையில் அதற்கு மத்தியில் குடிநீர் குழாயிலிருந்து பெண்கள் குடிநீர் பிடிக்கும் அவலம் நீடிக்கிறது. சாக்கடைகளை தூர்வாராமலும், கால்வாய்களை மராமத்து செய்யாமலும் இருப்பதால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தால் தற்காலிகமாக சாக்கடை அடைப்புகளை சரி செய்வதும், சில வாரங்களில் மீண்டும் சாக்கடை நிரம்பிவழிவதுமாக இருப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago