திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3 கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதற்கான மாவட்ட அளவிலான பணிக்குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அறிவுறுத்த லின்படி, தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் 3 கட்டமாக வழங்கப்படவுள்ளன. முதற்கட்ட மாக அரசு மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனை பணி யாளர்களுக்கு வழங்கப்படும். 2-ம் கட்டமாக கரோனா நோய் தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் அனைத்துத்துறை முன்கள பணி யாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோர், பல் வேறு நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக முன்பதிவு செய்தவர் களுக்கு மட்டுமே கரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கப்படும். இந்த தடுப்பூசிகளை போடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். மேலும், நோய் தொற்றில் இருந்து பாது காத்துக்கொள்ளலாம் என சுகா தாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் நபர்களுக்கு தற்போது தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் சுமார் 2.5 லட்சம் நபர்களுக்கு வழங்கப்படவுள்ளன. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சுகாதாரத் துறை வழிகாட்டுதலின் பேரில் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 4 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்துள் ளனர்.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 353 தனியார் மருத்துவமனைகளில் கணக் கெடுக்கப்பட்டு, அதில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் விரைவாக பதிவுகளை முடிக்க வட்டார அளவிலான பணிக்குழு அலுவலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பதிவுக்கான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசிகள் குளிர் சாதனப்பெட்டிகளில் வைக்க வேண்டுமென்பதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குளிர்சாதன மையங்களை தயார் படுத்தும் பணிகளும், பழுது நீக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.
அதேபோல, அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கீழ் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள், இதர தனியார் கட்டிடங்கள் என மொத்தம் 650 மையங்களில் தடுப்பூசி போடவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகளை போடவுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட அளவில் நியமிக் கப்பட்டுள்ள பணிக்குழு அலு வலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரிசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago