ஈரோட்டில் செவிலியர் மூலம் குழந்தையை விலைக்கு வாங்க வந்த மூன்று பெண்கள் உட்பட நால்வரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான பவானியைச் சேர்ந்த பெண்ணைத் தேடி வருகின்றனர்.
ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் கிராம சுகாதார அலுவலகத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வருபவர் அகிலா. இவரிடம் போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால் தெரிவியுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும், சட்டப்பிரச்சனை ஏதும் இல்லாத வகையில், வழக்கறிஞருடன் வந்து குழந்தையை பெற்றுக்கொள்வதாகவும் போனில் பேசியவர் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அகிலா, இது குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், கருங்கல்பாளையம் போலீஸில் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டது. போலீஸாரின் ஆலோசனைப்படி, அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய செவிலியர் அகிலா, ‘நீங்கள் கேட்பது போன்று குழந்தை உள்ளது.வந்தால் பெற்றுக்கொள்ளலாம்’ என கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையை வாங்குவதற்காக 3 பெண்கள், ஒரு ஆண் என 4 பேர் அகிலாவை அணுகியுள்ளனர். அவர் களைப் பிடித்த கருங்கல்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி (30), சேலத்தை சேர்ந்த கோகிலா (32), மோகன பிரியா (22), மற்றும் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் (33) எனத் தெரியவந்தது. அவர்கள் நால்வருக்கும் ஏற்கெனவே குழந்தை இருப்பதும், பவானி லட்சுமிநகரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் தங்களிடம் பெண் குழந்தை கேட்டதால், செவிலியர் அகிலாவைத் தொடர்பு கொண்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லட்சுமிநகர் சண்முகப்பிரியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தச் சென்றபோது, அவர் தலைமறைவாகி விட்டார். அதே நேரத்தில் அவருக்கும் 15 வயதான பெண் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், யாருக்காக குழந்தையை வாங்க இந்த கும்பல் முயற்சி செய்தது என்பது தெரியாத நிலை ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago