புயல் மழையால் மக்கள் கடும் பாதிப்பு குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் ரவிக்குமார் எம்.பி மத்திய குழுவிடம் முறையீடு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பது:

மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு 'நிவர்' புயல் நிவாரணம் முதற்கட்டமாக ரூ 2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும். வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாக பார்வையிட வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே ரூ 3,558.55 கோடி கேட்டுள்ளது. அதனை உடனடியாக தமிழக அரசுக்கு அளிக்க மத்திய குழு பரிந்துரை செய்யவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.அக்கிராமங்களில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 'நிவர்' புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தேசிய வனக்கொள்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள நிலப்பரப்பில் 33.33 சதவீதம் மரங்கள் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 11.86 சதவீத மரங்கள் தான் உள்ளன. கூடுதல் மரங்களை நட்டு வனப் பரப்பை அதிகரிக்க இக்குழு பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்