பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பும் பணி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு

By செய்திப்பிரிவு

பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு கால்வாய் வழியாக தண்ணீரை திருப்பி விடும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து இருக்கிறது. அகரம், கவுன்டன்யா மற்றும் பொன்னை ஆறுகளில் ஏற்பட்டுள்ள நீர்வரத்தால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர். இதன் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், பொதுப்பணித் துறை ஏரிகளில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக இருக்கும் சதுப்பேரி ஏரிக்கு அப்துல்லாபுரம் பகுதி பாலாற்றில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வர வேண்டும். ஆனால், கால்வாய் தூர் வார வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் திருப்பிவிடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அதேபோல், விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் பிரிவு கால்வாய் கதவுகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். கே.வி.குப்பம் அருகே கவசம்பட்டு பகுதியில் பாலாறு இரண்டாகப் பிரிந்து கொட்டாறாக திருமணி அருகே ஒன்று சேருகிறது.

எனவே, கொட்டாற்றில் இருந்து கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விடும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது ஏரிகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை பிரித்து அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.

பள்ளிகொண்டா அருகேயுள்ள கீழாச்சூர் பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் பாலாற்றில் இருந்து ஒக்கனாபுரம், கந்தனேரி, இறைவன்காடு ஆகிய ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீரை பிரித்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பசுமாத்தூர் ஏரிக்கு செல்லும் கால் வாயை பலப்படுத்தி தண்ணீரை வீணாகாமல் ஏரிகளில் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், வட்டாட்சியர்கள் ரமேஷ் (வேலூர்), சரவணமுத்து (அணைக் கட்டு), வத்சலா (குடியாத்தம்) ராஜேஸ்வரி (கே.வி.குப்பம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்