தி.மலை மாவட்டத்தில் ஐடிஐ படிப்புக்கு வரும் 12-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ), 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 12-ம் தேதி வரை நடைபெறும். இடஒதுக்கீட்டின்படி, காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, தி.மலை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம்.
விண்ணப்பத்துடன் 8-ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும். இணைய வழியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம். மேலும் நெட் பேங்கிங், கூகுள் பே மூலமாகவும் செலுத்தலாம்.
இரண்டாண்டு பிட்டர், டர்னர், இயந்திரவியல் தொழில் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு வெல்டர் தொழில் பிரிவுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜமுனாமரத்தூரில் உள்ள அரசு பழங்குடியினர் தொழில் பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு பிட்டர் மற்றும் எம்எம்வி தொழில் பிரிவுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு வயர்மேன் மற்றும் ஓராண்டு வெல்டர், பிளம்பர் தொழில் பிரிவுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago