முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை ஓசூர் சாலையில் உள்ள அதிமுகவின் மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன் தலைமையில் மெளன ஊர்வலமாக சென்று, அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, இதயதெய்வம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், அந்தந்த பகுதி அதிமுகவினர் சார்பில், ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவைப்புதூர் மைதானத்தில் 2 ஆயிரம் விளக்குகள் ஏற்றி பெண்கள் அஞ்சலி செலுத்தினர்.
வடவள்ளி, வீரகேரளம்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினீயர் சந்திரசேகர் தலைமையில் வடவள்ளி, வீரகேரளம், மருதமலை, பொம்மணாம்பாளையம், கல்வீரம்பாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இன்ஜினீயர் சந்திரசேகர் பேசும் போது, ‘‘அதிமுகவையும் பொதுமக்களையும் கட்டுக்கோப்பாக காப்பாற்றிய ஜெயலலிதா, நம்மை விட்டு பிரிந்து மூன்றாண்டு கடந்துவிட்டது. அவரது நினைவு நாளில், கட்சிக்காக கடுமையாக உழைத்து, வரும் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் களப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். பொதுமக்களை சந்தித்து அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். பொதுமக்களுக்காக அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மக்களின் பிரச்சினைகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பதில் அதிமுக எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார் ஆகியோர் மக்கள் நலத் திட்டங்களை கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர். வரும் தேர்தல் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். அம்மாவின் கனவை நனவாக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.
இதில் அதிமுக மாவட்ட பொருளாளர் பார்த்திபன், நிர்வாகிகள் வக்கீல் மனோகரன், செல்வராஜ், அசோக்குமார், கருப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இணைந்தனர்
கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இதயதெய்வம் மாளிகையில் நேற்று நடந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, அமைச்சர் வரவேற்றார்.பின்னர் அவர் பேசும்போது, ‘‘அதிமுகவில் தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து களப் பணியாற்றி வருகின்றனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜூனன், ஆறுக்குட்டி, கந்தசாமி, ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்பு கையில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். எதிர்வரும் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு களப்பணி ஆற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago