கடலூர் மாவட்டத்தில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.
முதலில் சேத்தியாத்தோப்பு - வடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் பகுதியில் பரவனாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதை பார்வையிட்டார்.
பின்னர் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து குமராட்சி ஊராட்சிஒன்றியம் எள்ளேரி ஊராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு, மழைநீரினை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சர்வராஜன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்கிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் குமராட்சி ஒன்றியம் திருநாரையூரை ஊராட்சியில் ஊருக்குள் செல்லும் சாலையில் கனமழையால் மழை வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குநர், ராஜேஷ்,மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் படகில் சென்றனர்.
அங்கு, பாதுகாப்பு முகாம்மையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களிடம் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கிறதா என கேட்டறிந்தனர். மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்களையும் பாவையிட்டனர்.
தொடர்ந்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழை வெள்ள மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
‘புரெவி’ புயலின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 34 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
வெள்ள மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்திலுள்ள 441 பாதுகாப்பு முகாம் மையங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு என 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் முகாம்களில் தங்கும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பழுதடைந்த, பலவீனமான வீடுகள், நீர் சூழக்கூடிய மற்றும் நீர் உட்புகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகே மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக வந்து தங்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago