புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோடு, நாமக்கல், ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் ஒன்றிய நிர்வாகி ஜெயமணி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
திருச்செங்கோடு ஸ்டேட் வங்கி எதிரில் நடந்த போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் தலைமை வகித்தார். பேரணியாக வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோபி பேருந்துநிலையம் எதிரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசெயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மொத்தம் 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஓசூர் ஒன்றிய செயலாளர் பி.ஜி.மூர்த்தி தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை ஓசூர் நகர போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago