சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரை போலீஸார் கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை வழிமறித்து ஓட்டுநர்களைத் தாக்கிய மர்ம கும்பல், லாரியை கடத்திச் சென்று அதிலிருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். எஸ்பி பண்டிகங்காதர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த பரத் தேஜ்வாணி (37) மற்றும் அமிதாப் தத்தா ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் ஓடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரா சவுகான் (45), அதே பகுதியைச் சேர்ந்த பவானி சிங் (47), ரோடுடேரா பகுதியைச் சேர்ந்த கமல்சிங்(50), இந்தூரைச் சேர்ந்த அமீர்கான் (39), பரத் அஸ்வானி (32), ஹேமராஜ் (26) ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 6 பேரும் நேற்று ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago