மார்ச் மாதத்துக்குள் குடிநீர் திட்ட பணிகளை முடிக்க வேண்டும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் அறிவுரை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, சி.என்.மகேஸ்வரன் பேசியது: திருச்சி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் 14 மற்றும் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திலிருந்து 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,093 குக்கிராமங்களில் 98,286 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு கள் வழங்கும் பணி ரூ.71.58 கோடி மதிப்பீட்டுத் தொகை யில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் கிராமப் பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை மற்றும் வரிசையில் நின்று குடிநீர் பிடிப்பது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும். ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் அனைத்தையும் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, ஊரக வளர்ச்சி மற்றும் வடிகால் வாரிய அலுவர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்