நெல்லை, தென்காசியில் தொடர் மழை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. நிவர், புரெவி புயலின்போதும் போதிய மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கன மழையாக பெய்யாமல் விடிய விடிய மிதமான அளவில் மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 70 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 49.40 மி.மீ., சங்கரன்கோவிலில் 48 மி.மீ., செங்கோட்டையில் 47 மி.மீ., சிவகிரியில் 40 மி.மீ., குண்டாறு அணையில் 39 மி.மீ., அடவிநயினார் அணையில் 31 மி.மீ., ராமநதி அணையில் 30 மி.மீ., ஆய்க்குடியில் 24.60 மி.மீ., கடனாநதி அணையில் 22 மி.மீ. மழை பதிவானது.

கடனா நதி அணை நீர்மட்டம் அரையடி உயர்ந்து 79 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் சிறிது உயர்ந்து 73.25 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 68.24 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணையில் நீர்மட்டம் அதிகரிக்காமல் 90.50 அடியாக இருந்தது.

மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் நேற்று மிதமான மழை நீடித்தது. அதிகபட்சமாக சேர்வலாறு அணைப்பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 53, மணிமுத்தாறு- 55, நம்பியாறு- 6, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 33, சேரன்மகாதேவி- 19.20, நாங்குநேரி- 23, பாளையங்கோட்டை- 53, ராதாபுரம்- 22, திருநெல்வேலி- 32.

பாபநாசம் அணை நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1074 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 384 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 602 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 129.46 அடியிலிருந்து 132.68 அடியாக உயர்ந்திருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 19-ல் இருந்து 20 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடி, கொடுமுடியாறு நீர்மட்டம் 34.75 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்