நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாலையில் தொடங்கி இரவிலும் நீடித்த மழை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. இம்மழை இரவிலும் நீடித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சேரன் மகாதேவியில் 0.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அணைப்பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை என்பதால், அணைகளின் நீர்மட்டத்தில் பெரிய மாறுதல் இருக்கவில்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 122.95 அடி, சேர்வலாறு நீர்மட்டம் 129.46 அடி, மணிமுத்தாறு நீர்மட்டம் 96.40 அடி, வடக்கு பச்சையாறு- 19 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது.

பாளையங்கோட்டை மூர்த்தி நாயனார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (70). இவரது வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இதில் இருதயராஜ் காயமடைந்தார். பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்குசென்று இருதயராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆயுதப்படை காவலர்கள்

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் பேரிடர் மீட்பு பணிகளுக்காக பாளையங் கோட்டை ஆயுதப்படையில் 37 ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் 37 காவலர்களும் பேரிடர்கள் நேர்ந்தால் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பொட்டல் பகுதியில் டிராக்டர்கள் மூலம் நிலத்தை பண்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இம்மழை இரவிலும் நீடித்தது

தென்காசியில் மழை

புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், புயல் வலுவிழந்ததால் தென்காசி மாவட்டத்துக்கு மழைப்பொழிவு கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் லேசான தூறல் மட்டுமே இருந்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., அடவிநயினார் அணை, செங்கோட்டை, சிவகிரியில் தலா 1 மி.மீ., கருப்பாநதி அணையில் 0.5 மி.மீ. மழை பதிவானது. போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்