விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைகள் வடகரை அருகே தென்னைகள் சேதம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் வடகரை அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த ஓராண்டாக காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. தென்னை, மா, வாழை, நெல் போன்ற பயிர்களையும், தண்ணீர் குழாய்கள், சோலார் வேலிகளையும் யானைகள் சேதப் படுத்துகின்றன. வடகரை அருகே உள்ள சென்னாப்பொத்தை, சீவலான்காடு, குறவன்காடு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக 2 யானைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள ஏராளமான தென்னை மரங்களை வேரோடு சாய்த் துள்ளன. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

100 மரங்கள் சாய்ப்பு

இதுகுறித்து விவசாயி ஜாகிர்உசேன் கூறும்போது, “ஆண்டுதோறும் மாங்காய் விளைச்சல் காலத்தில் மட்டும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும். ஆனால், கடந்த ஓராண்டாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துகின்றன. கடந்த 3 நாட்களாக 6 விவசாயிகளுக்குச் சொந்தமான 30 ஆண்டு வயதுள்ள சுமார் 100 தென்னை மரங்களை சாய்த்துவிட்டன. மேலும், சோலார் வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன. இந்த யானைகள் பகல் நேரங்களில் அருகில் உள்ள ஓடைப் பகுதிக்குள் பதுங்கிக்கொள்கின்றன.

யானைகள் நடமாட்டத்தால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் 2 ஆண் யானைகள் விவசாயிகளை விரட்டுகின்றன. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் விவசாயிகளும் உடன் வருமாறு அழைக்கின்றனர்.

தீர்வு காண்பது அவசியம்

காட்டு யானைகள் வனப்பகுதிக் குள் செல்லாமல் அடிக்கடி விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதப்படுத்துவதற்கான காரணங்களை வனத்துறை ஆராய வேண்டும். வனப்பகுதிக்குள் யானைகள் வசிப்பதற்கு உள்ள இடையூறுகள் என்ன என்பதை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். நிரந்தரமாக யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதம், பொருட் சேதம் போன்றவற்றுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்