திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 1,222 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 439 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. அதன்பிறகு, அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,222 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.
119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 93.70 அடியாக உள்ளது. அணை பகுதியில் 2,895 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் நேற்று காலை 53.6 மி.மீ., மழை பெய்திருந்த நிலையில், மழையின் தாக்கம் குறைந்ததால், நேற்று மாலை நிலவரப்படி 1.4 மி.மீ., அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது.
60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 34.11 அடியாக உள்ளது. அணையில் 207.30 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 10.4 மி.மீ., மழை பெய்துள்ளது. அணையில் இருந்து ஏரிகளுக்கு விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 15.91 அடியாக உள்ளது. அணையில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 26 கனஅடி தண்ணீர் வருகி றது. அணை பகுதியில் 33.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 57 அடி என்ற நிலையில் பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வரும் 125 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் 287 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
தண்டராம்பட்டில் 71 மி.மீ., மழை
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தண்டராம் பட்டு பகுதியில் 71.6 மி.மீ., மழை பெய் துள்ளது. ஆரணியில் 35.8, செய்யாறில் 31, செங்கத்தில் 48.4, ஜமுனாமரத்தூரில் 23, வந்தவாசியில் 54, போளூரில் 41, தி.மலையில் 43, கலசப்பாக்கத்தில் 47.6, சேத்துப்பட்டில் 50, கீழ்பென்னாத்தூரில் 62.6, வெம்பாக்கத்தில் 26.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
இடிந்து விழும் வீடுகள்
போளூர் நகரம் மொகைதீன் பேக் தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஒரு பகுதி நேற்று பிற்கபல் இடிந்து விழுந்தது. அப்போது மின் கம்பம் மற்றும் மின் வயர்கள் சேதமடைந்தன. ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தின் மறு பகுதியையும் இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல், வெம்பாக்கம் மற்றும் செய்யாறு வட்டங்களில் 17 கூரை வீடு மற்றும் ஓட்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.மேலும், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளன. இதனால், அறு வடைக்கு தயாராகி வந்த நெற்பயிர்கள், தானியங்கள், தோட்டப் பயிர்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் ஏரிகளும் நிரம்பி கோடி போகிறது. பல கிராமங்களில் ஏரிக்கரை மற்றும் மதகுகள் பலவீனமாக உள்ளதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘‘ஏரிக்கரை மற்றும் மதகுகளை பாதுகாக்க பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago